கியூபர்டினோ (அமெரிக்கா):ஆப்பிள் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதத்தில், புதிய ஐபோன் சீரிஸ்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஐபோன் 15 சீரிஸ் வகை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கியூபர்டினோவில், இதற்கான அறிமுக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஐபோன் ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அது பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளன என்று கூறினால் அது மிகையல்ல. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் போனில், அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவின் மார்ஸ் ரோவரில் பயன்படுத்தப்பட்ட கிரேட் 5 டைட்டானியம் சேஸ் இடம்பெற்று உள்ளது. இந்த போன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் விகிதம் உடனான பெரிய அளவிலான 6.7 அங்குல டிஸ்பிளேவை, தன்னகத்தே கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், இந்த ஐபோனில். ஸ்டெயின்லெஸ் இரும்பு பயன்படுத்தப்படாததால், இது லேசான எடை கொண்டதாக உள்ளது. மேலும், ஐபோனில் ஆக்சன் பட்டனுக்கும் அருகே இருந்த தனித்துவம் மிகுந்த சுவிட்ச் இதில் இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, புதிய கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆக்சன் பட்டன் இடம்பெற்று உள்ளது.
இந்த ஐபோன், ஒரு வினாடிக்கு 35 டிரில்லியன் செயல்பாடுகளுக்கான ஆதரவுடன் புதிய கட்டமைப்பு உடன், புதிய ஏ17 ப்ரோ சிப் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது ரே டிரேசிங்கிற்கான தகவமைப்பு உடன், மேம்படுத்தப்பட்ட GPU செயல்திறனையும் தன்னகத்தே கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.