காசா: இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக போர் பதற்றம் நிலவி வருகிறது. காசா உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்குக் கரையையும், காசாவையும் கைப்பற்ற முயற்சிக்கும் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது. இதனிடையே பாலஸ்தீனத்தின் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மூத்த அதிகாரியை கடந்த வாரம் இஸ்ரேல் கைது செய்தது. இதற்கு பதிலடி கொடுக்க இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு திட்டமிட்டது. இதையறிந்த இஸ்ரேல், கடந்த மூன்று நாட்களாக மேற்குக்கரை பகுதியை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 5-ம் தேதி நடந்த தாக்குதலில், இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் ஆயுதப்பிரிவு தளபதியான தைஷர் அல் ஜபரி, ஒரு குழந்தை உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காசாவிலிருந்து பாலஸ்தீனம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு(ஆகஸ்ட் 6) காசாவின் ரஃபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மற்றொரு தளபதியான ஹலித் மன்சூர் மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு குழந்தை உள்பட 5 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் இரண்டு தளபதிகள், பயங்கரவாதிகள், பொதுமக்கள் என 29 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 3 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம்: 12 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் ராக்கெட் தாக்குதல்!