சான் அன்டோனியோ: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தெற்கு பகுதியில் உள்ளது, சான் ஆன்டோனியோ நகரம். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள இந்நகரத்தின் புறநகர் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுள்ளது. நேற்று (ஜூன் 27) மாலை 6 மணியளவில் அதிலிருந்து வந்த ஒருவரின் அழு குரலை கேட்டு அங்கிருந்த பணியாளர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், ரயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டிருந்த லாரியை பொதுமக்கள் திறந்துள்ளனர். லாரியின் உள்ளே 50-க்கும் மேற்பட்டோர் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாரியில் இருந்து 46 உடல்களை மீட்டனர். மேலும், அதில் உயிருடன் இருந்த 4 குழந்தைகள் உள்பட 16 பேரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், உடலில் நீரின் அளவு குறைந்து, உடல் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற்ற வந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. லாரியில் உணவோ, தண்ணீரோ, காற்றோட்டமோ இல்லாததாலும், அதிக வெப்பம் இருந்த காரணத்தாலும் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.