டோர்னாட்டோ (கனடா): கனடாவின் வான்கோவருக்கு வெளியே உள்ள சர்ரே பகுதியில் கடந்த ஜூன் மாதம், 45 வயதான சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் முகமூடி அணிந்த நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியா உடந்தையாக இருந்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கடந்த மாதம் வெளிப்படையாகத் தெரிவித்தார். அப்போதில் இருந்து, இந்தியா - கனடா உறவில் சிக்கல் தொடங்கியது.
அதிலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் பிறந்து கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற நிஜ்ஜார், பயங்கரவாத தொடர்புடையவர் என இந்தியா கூறியது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கனடா தூதர்களை குறைப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 62 கனடா தூதர்களில், 41 பேரை குடும்பத்துடன் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.