அலபாமா :அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் தனியார் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் கால்பந்து வீரர் உள்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலபாமா மாகாணத்தில் உள்ள டேட்விலி நகரில் கடந்த சனிக்கிழமை இரவு தனியார் விருந்து நடைபெற்றது.
தனது தங்கையின் 16ஆவது பிறந்த நாள் விழா விருந்தில் கலந்துகொள்ள உள்ளூர் கால்பந்து அணியின் வீரர் பில் டோட்வெல் உள்பட ஏறத்தாழ 50 பேர், அந்த விழாவில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விருந்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த நபர், அங்கு குழுமியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடத் தொடங்கி உள்ளார்.
இதில் இளம் கால்பந்து வீரர் உள்பட 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 25க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலமாக கிடந்தவர்களை மீட்டும், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கும் அனுப்பினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான கால்பந்து வீரர் பில் டோட்வெல் உயர் நிலை கல்வியை முடித்த நிலையில் அமெரிக்க கால்பந்து அமைப்பின் உதவித்தொகை மூலம் புளோரிடாவில் உள்ள மாகாண கல்லூரிக்கு தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர், கல்லூரியில் சேர இருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.