துபாய்:ஐக்கிய நாடுகள் சபையின் உலக காலநிலை மாற்றத்துக்கான 28வது மாநாடு நேற்று துபாயில் தொடங்கிய நிலையில், இம்மாநாடு டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு துபாய் சென்றடைந்தார்.
இது குறித்து அவர் தனது X தளத்தில், “துபாயில் உள்ள இந்தியர்கள் அளித்த வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் அளிக்கும் ஆதரவும், உற்சாகமும் தான் உறுதியான பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. ஒரு சிறந்த புவியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு COP-28 மாநாட்டில் பங்கேற்பதற்காகத் துபாய் வந்துள்ளேன். மாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த ஆண்டு நடைபெறும் cop28 மாநாடு, உலகின் பல நாடுகளில் நடந்த இயற்கை பேரழிவு, காட்டு தீ, அதிகரித்த பூமியின் வெப்பம் போன்றவை குறித்து நடைபெற உள்ளது. ஏனெனில் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வெப்பமான ஆண்டாக இந்த ஆண்டு பதிவாகி இருப்பதாகவும், இது குறித்து உடனடி நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி துபாயில் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று நடைபெற உள்ள உலக பருவநிலை உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த அமர்வாகக் கருதப்படுகிறது. இந்த அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளார். குறிப்பாக, காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் எரிபொருள் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் போன்றவை முதன்மையான கருத்தாக முன்வைக்கப்பட்டுப் பேசப் பட உள்ளது என மோடி தெரிவித்திருந்தார்.