கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் நிலவி வரும் நிலையில் , அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக கோரி இளைஞர்கள் , எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிபர் மாளிகையை நேற்று முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றி உள்ளே சென்று மாளிகையை முழுவதுமாக கைப்பற்றினர். மக்களின் கிளர்ச்சியை தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அனைத்து கட்சி கூட்டம் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்பட்சத்தில், தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அதற்கு வழிவிட தயார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை அமைச்சர்கள் ஹரின் ஃபர்னான்டோ, மனுஷா நாணயக்காரா ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். போராட்டக்காரர்கள் அதிபர், பிரதமர் இருவரையும் பதவி விலக கோரி போராடி வரும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் புதன்கிழமை (ஜூலை 13) அன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பிரதமரின் வீடு தீக்கிரை, அதிபர் ராஜினாமா- என்ன நடக்கிறது இலங்கையில்? டாப்-10 தகவல்கள்