நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. நேபாள பிரதமர் சர்மா ஒலி, இந்தியாவின் மீதும் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டியது இரு நாட்டு உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அவரது பேச்சை முன்னாள் பிரதமர் பிரசண்டா உள்ளிட்ட பலர் கண்டித்தனர்.
அதன் பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. எதிர்ப்பாளர்கள் தனி கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினர். கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்துகொண்டே வந்தது. நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையை இழந்தார்.
இந்நிலையில், நேபாள அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இன்று (டிச.20) காலை நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேபாள குடியரசுத் தலைவர் வித்தியா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிடும்படி பிரதமர் கே.பி.சர்மா ஒலி பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் பித்யா தேவி பண்டாரி தற்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் அளித்துள்ளார். நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று (டிசம்பர் 20) அறிவித்தார். மேலும் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 30 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இதையும் படிங்க: நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் சர்மா ஒலி பரிந்துரை!