அமெரிக்கவைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் என்ற செய்தி நிறுவனத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய ஜமால் கஷோகி 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி படுகொலைசெய்யப்பட்டார்.
சவுதி அரசை தொடர்ச்சியாக விமர்சித்து பல கட்டுரைகளை எழுதியதன் காரணமாகவே துருக்கி நாட்டில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தில் வைத்து கஷோகி கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டநிலையில், தங்கள் தந்தையைக் கொன்ற ஐந்து குற்றவாளிகளைத் தாங்கள் மன்னித்துவிட்டதாகவும், தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிடுவதாகவும் ஜமால் கஷோகியின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு கஷோகியின் காதலியான ஹாடைஸ் சென்கிஜ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு மன்னிப்பு தர யாருக்கும் உரிமையில்லை என கஷோகியின் பிள்ளைகள் விடுத்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
கஷோகி தனது காதலியான ஹாடைஸை திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில், திருமணம் செய்வதற்கு தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கவே அவர் சௌதி அரேபிய தூதரகத்திற்குச் சென்றார். அந்த தூதரகத்தில் வைத்துதான் கஷோகி கொல்லப்பட்ட நிலையில், இத்தகையச் செயலில் ஈடுபட்டவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவரின் காதலியான ஹாடைஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO