ஈரானின் போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் ஈரான் அரசின் அணு உலையில் 20 விழுக்காடு யுரேனியத்தைச் செறிவூட்டும் பணியைத் தொடங்க அந்நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி உத்தரவிட்டுள்ளார்.
20% செறிவூட்டல் என்பது ஆயுத-தர மட்டங்களிலிருந்து மாறுபட்ட ஒரு குறுகிய, தொழில்நுட்ப படிநிலை முன்னேற்றம் என ஈரான் கருதினாலும் அதற்கு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. குறிப்பாக, ஈரானின் இந்த முடிவை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இஸ்ரேல் நாட்டின் அதிபர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகளுக்கிடையே யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் அரசு தொடங்கியுள்ளதாக அணுசக்தி திட்டங்களைக் கண்காணித்துவரும் சர்வதேச அணுசக்தி நிறுவனமும் உறுதிசெய்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காபி அஷ்கெனாசி இன்று (ஜன. 05) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யுரேனியம் செறிவூட்டும் அளவை உயர்த்துவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதன்மூலம் ஈரான் அதன் கடமைகளிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான ஈரானின் நோக்கத்தை இதன்மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது. 20% யுரேனியம் செறிவூட்டல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ள ஈரானின் முடிவிற்கு சர்வதேச நாடுகள் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும். ஈரானிடம் அமைதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு நான் பகிரங்க அழைப்புவிடுக்கிறேன். ஈரானின் அறிவிப்புக்கு உறுதியான மற்றும் உடனடி பதில் அளிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.