துபாய்:57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இஸ்ரேல் காஸா நகரின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக அவசர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது.
இதில் பேசிய ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஹனீப் அட்மர், பாலஸ்தீனிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை என்பது இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ரத்தக்காயம் என வர்ணித்துள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியை நிர்வாகிக்கும் பாலஸ்தீன ஆணையத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாட் மல்கி, "நாம் அல்லாவிடம் கடைசி நாளை எதிர்பார்க்கிறோம் எனச் சொல்லவேண்டும். நாங்கள் நீண்டநாள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துச் சண்டையிடுகிறோம். அதுதான் அடிப்படை பிரச்னை" எனப் பேசியுள்ளார்.
ஆனால், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியின் மீது பாலஸ்தீனியத்தின் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை.
கிழக்கு ஜெருசலேம், வெஸ்ட் பேங்க், காசா பகுதியில் அண்மையில் நிலவும் சூழலுக்கு இஸ்ரேலே காரணம், கடந்த வாரம் நாங்கள் விடுத்த எச்சரிக்கை கவனிக்கப்படவில்லை என துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்டமாகப் பேசியுள்ளார்.
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர், இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதாகவும், இஸ்ரேல் எதிர்ப்பின் மொழியை மட்டும் புரிந்துகொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இஸ்ரேல் தாக்குதலில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.