2020ஆம் ஆண்டின் தொடக்கத்தை அதிரடி அதகளத்துடன் ஆரம்பித்து வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் அமெரிக்க தாக்குதல் படையினர் ஈராக்கில் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானை சேர்ந்த ராணுவத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகனாகவும் வலம்வந்த குவாசிம் சொலைமானி பலியாகியுள்ளார்.
ஈரான் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட நாட்களாக நடைபெற்றுவந்த மோதல் போக்கு, தற்போது நேரடிப் போராக மாறும் அபாயத்தை இந்தத் தாக்குதல் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயலால், அமெரிக்கா ஈரான் மட்டுமல்லாமல், ஈராக், இஸ்ரேல், சிரியா, சவுதி அரேபியா என ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியமும் பதற்றநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள இந்தப் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிசமாக உயரும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம் தங்களின் பொருளாதாரத்தையும் எவ்வாறு பாதிக்கும் என அச்ச உணர்வில் ஈரான் - அமெரிக்காவின் நகர்வுகளை உலகநாடுகள் அனைத்தும் உற்றுநோக்கியுள்ளன.
ஈரான் - அமெரிக்கா மோதலின் பின்னணிக் கதை
ஈரான் - அமெரிக்காவுக்கிடையே நீண்ட நாட்களாகவோ மோதல் போக்கு நிலவிவருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்காவுடன் நட்பு நாடாகவே ஈரான் இருந்துவந்தது. 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற உள்நாட்டு புரட்சி அமெரிக்க ஆதரவு அரசை நீக்கி, அமெரிக்காவுக்கு எதிரான அரசாட்சியை நிறுவியது. அதன்பின்னர் ஈரான்-ஈராக் யுத்தம், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, ஈரானின் அணு ஆயுத திட்டம் ஆகிய நிகழ்வுகளால் இரு நாட்டு உறவும் மோசமடைந்துவந்தது.
எண்ணெயும், அணு ஆயுதமும்தான் அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கின் மையப்புள்ளிகள். மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் மிக்க இரு முக்கிய நாடுகள் ஈரான் மற்றும் சவுதி அரேபியா. இரு நாடுகளும் இஸ்லாமிய மதத்தின் இரு துருவங்களான சன்னி, ஷியா பிரிவுகளின் தலைமையிடங்களாக திகழ்ந்துவருகின்றன. மதக் கொள்கையால் முரண்பட்டுள்ள இரு நாடுகளும் தங்களின் எண்ணெய் வளங்களைக் கொண்டு பொருளாதார ரீதியாக மோதிக்கொள்கின்றன.
அமெரிக்கா,தனது எதிரியான ஈரானைக் கட்டம் கட்ட சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவின் அரசியல் எதிரியான ரஷ்யாவின் ஆதரவு ஈரானின் பக்கம். அத்துடன் ஈரானும் சவுதி அரேபியாவும் மோதிக்கொள்ளாமல், தனது அண்டை நாடுகளில் நீண்ட காலமாக மறைமுகமாக மோதலில் ஈடுபட்டுவருகின்றன. சிரியா, ஏமன், லிபியா, ஈராக் எனப் பல நாடுகளின் உள்நாட்டுப்போரை ஈரான் - சவுதி நாடுகள் தங்களின் யுத்தக் களங்களாக பயன்படுத்திவருகின்றன.
அமெரிக்கா - ஈரான் - சவுதி மோதல் போக்கால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியும் பொருளாதாரமும் சீர்குலைந்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஒரு புதிய திருப்பத்தை சந்தித்தது.
ஈரானுடன் நல்லுறவை உருவாக்கும் நோக்கில், அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டுடன் வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கிக்கொள்வதாகவும், பதிலுக்கு ஈரான் தனது அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் ஒப்பந்தம் முடிவாகியது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய வல்லாதிக்கங்களும் உறுப்பு நாடுகளாகச் சேர்ந்துகொண்டன.
ட்ரம்பின் வருகையும் தலைகீழ் மாற்றமும்:
2017ஆம் ஆண்டு ஒபாமாவுக்குப்பின் ஆட்சிப் பொறுப்புக்குவந்த ட்ரம்ப், ஒபாமா செயல்படுத்திய பல்வேறு ஒப்பந்தங்கள் செல்லாது என திரும்பப்பெறத் தொடங்கினார். அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ட்ரம்ப், ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அள்ளி வீசினார். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அழுத்தம் தந்தார்.