தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 14, 2019, 9:21 PM IST

ETV Bharat / international

'எர்டோகனின் தீவிர ரசிகன் நான்' - துருக்கி அதிபருக்கு ட்ரம்ப் புகழாரம்!

வாஷிங்டன்: 'அமெரிக்கா வந்துள்ள துருக்கி அதிபர் டயீப் எர்டோகனின் தீவிர ரசிகன் நான்' என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

trump erdogan

அரசு முறைப் பயணமாக துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகை சென்றிருந்த அவரை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இருவரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், "நான் அதிபர் எர்டோகனின் தீவிர ரசிகன் ஆவேன். குர்து-சிரியா போராளிகள் மீது துருக்கி ஏன் தாக்குதல் நடத்தியது என்பதை நான் நன்கு அறிவேன். அவர்கள் பிரச்னை என்னவென்று எனக்குப் புரிகிறது" என அதிபர் எர்டோகனுக்கு ஆதரவாகப் பேசினார்.

வடகிழக்கு சிரியாவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் வெளியேறினர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுடனான சண்டையில் அமெரிக்காவுடன் தோளோடு தோள்நின்று போரிட்ட சிரிய ஜனநாயகப் படையினரை வழிநடத்திய, குர்து போராளிகளை, துருக்கி அரசு பயங்கரவாதிகள் என கருதுவதாலேயே இந்தத் தாக்குதலை மேற்கொண்டது.

இது அமெரிக்க - துருக்கி நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில்தான் துருக்கி அதிபர் எர்டோகன் அமெரிக்கா சென்றுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள : சிரியாவில் திடீர் திருப்பம், சிரிய உள்நாட்டுப் போர் பின்னணி!

ட்ரம்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் எர்டோகன் , "அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் குர்து போராளிகள் உண்மையில் பயங்கரவாதிகள் ஆவர். குர்துகள் மீது கருணை கொண்ட சில வட்டாரங்கள், அமெரிக்க மக்களிடையே துருக்கி குறித்து பொய்ப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். துருக்கிக்கு எதிராக அமெரிக்க பிரிதிநிதிகள் சபை நிறைவேற்றிய தீர்மானம் இருநாட்டு உறவுகளை மோசமடையச் செய்துள்ளது" என்றார்.

குர்து மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கப் பிரிதிநிதிகள் சபை (கீழ் சபை) அக்டோபர் 20ஆம் தேதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்துக்கு செனட் சபை இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நிபந்தனை இல்லாமல் நவாஸுக்கு அனுமதி கிடையாது - பாகிஸ்தான் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details