தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொத்துக் கொத்தாய் வெளியேறும் மக்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்...’ - ஆப்கன் குறித்து அண்டோனியோ குட்டெரஸ் கவலை! - ஆப்கனில் பெண்களின் நிலை

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உரிமை மீறல்கள் குறித்து ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அன்டோனியோ குட்டரஸ்
அன்டோனியோ குட்டரஸ்

By

Published : Aug 14, 2021, 12:07 PM IST

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்டதை அடுத்து, அங்கு தலிபான்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது. முன்னதாக ஆப்கனின் கந்தகார், ஹேரத், கஜினி உள்ளிட்ட நகரங்களை தலிபான்கள் கைப்பற்றினர்.

தலிபான்கள் கட்டுக்குள் நாட்டின் 2 பங்கு இடங்கள்

ஆப்கன்

ஆப்கானியப் படைகள், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள தாலிபன்கள் நாட்டின் 34 மாகாண தலைநகரங்களில் பாதியை கைப்பற்றி, நாட்டின் இரண்டு பங்கு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கைப்பற்றப்படும் மாகாணங்களில் உள்ள பெண்களை பயங்கரவாதிகள் தங்களை திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிப்பு

இது குறித்து கவலை தெரிவித்துள்ள அண்டோனியோ குட்டெரஸ், "ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் அறிக்கைகள் என்னை கலக்கமடையச் செய்துள்ளன. பெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஆப்கானிஸ்தானில் பறிக்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது" என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் ஆப்கன் மக்களின் உரிமைகளை மேம்படுத்தவும், அவர்களுக்கான பாதுகாப்பு உதவிகளையும் வழங்க ஐநா உறுதியுடன் செயல்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சொந்த நாடு திரும்பும் வெளிநாட்டவர்கள்

வெளியேறும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு தொடர்ந்து மீட்டுச் செல்லப்பட்டு வருகின்றனர். முன்னதாக மசார்-இ-ஷெரிப் பகுதியில் உள்ள தூதரகத்தை இந்தியா தற்காலிகமாக மூடியது.

அங்கு பணிபுரிந்த அலுவலர்கள் இந்திய விமானப் படை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஏற்கனவே கந்தகாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய அலுவலர்கள் மீட்டு அழைத்து வரப்பட்ட நிலையில், மீதமுள்ள இந்தியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பணிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

தலிபான்களுக்கு குட்டெரஸ் எச்சரிக்கை

அன்டோனியோ குட்டெரஸ்

இந்நிலையில், நாட்டின் குடிமக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிகழ்த்துவது சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டங்களை கடுமையாக மீறுவதாகும் எனவும், இது போர்க்குற்றம் என்றும் குட்டெரஸ் எச்சரித்துள்ளார்

"தலிபான்கள்-ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு இடையேயான சண்டை மிகப்பெரிய தீங்கை விளைவிக்கிறது. குறைந்தது 2,41,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மனிதாபிமானம் சார்ந்த தேவைகள் ஆப்கனில் அதிகரித்து வருகின்றன. இந்த மோதல் பெண்களையும் குழந்தைகளையும் அதிக அளவில் பாதிக்கிறது" எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்

ABOUT THE AUTHOR

...view details