ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா-தலிபான் இடையே கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆப்கன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், அல்-கய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு துண்டித்துக் கொள்வதாகவும், ஆப்கன் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதைத் தடுப்போம் என்றும் தலிபான் வாக்களித்திருந்தது.
ஆனால், இதுகுறித்து தலிபான் நடவடிக்கை எடுத்ததாக எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இந்த விவகாரத்தில் தலிபான்கள் மௌனம் காப்பது அதனை பாதுகாப்பாக செயல்படுத்துவதற்காகவே என, ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸால்மே கலில்ஸாத் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அல்-கய்தா பயங்கரவாத அமைப்புடன் தலிபான் தொடர்பில் இருப்பதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அல்-கய்தாவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக அந்த அமைப்பின் வேறுசில தலைவர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் தான் தங்கியுள்ளனர்.