2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் அறிவிப்பானது மருத்துவத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்வி ஜே. ஆல்டர் (அமெரிக்கா), மைக்கெல் ஹாட்டன் (பிரிட்டன்), சார்லஸ் எம்.ரைஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. ஹெப்பாடிட்டிஸ் சி வைரஸ் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக இம்மூவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஹெப்பாடிட்டிஸ் வைரசை கண்டறியும் வழிமுறை தொடர்பான ஆய்வை இம்மூவரும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அவற்றை தடுத்து அழிக்கும் முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என விருது வழங்கும் குழு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 7 கோடி பேர் இந்த ஹெபாடிட்டிஸ் மோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் உயிரிழப்பு இந்நோயல் ஏற்படுகிறது. இந்த நோய் கல்லீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக விளங்குகிறது.
தற்போத உலகப் பெருந்தொற்றான கரோனா பாதிப்பை எதிர்த்து சர்வதேச நாடுகள் போராடிவரும் நிலையில், இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.