மாஸ்கோ (ரஷ்யா):ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள அங்காட்சியகத்தில் 40 ஆண்டுகள் பழமையான ஆர்கேட் விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, அருங்காட்சியகம் என்றால் பார்வையாளர்கள் பொருட்களை தொடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இங்கிருக்கும் அருங்காட்சியகமோ, முற்றிலும் வேறுபட்டது.
பொதுமக்களை கவரும் வகையில் இந்த அருங்காட்சியகத்தில் சோவியத் யூனியனின் புகழ்பெற்ற ரெட்ரோ ஆர்கேட் விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு வரும் முதியவர்கள் இந்த விளையாட்டுகளை விளையாடி, தங்களது இளமை காலத்தை நினைவுகூர்ந்தும், இளைய தலைமுறையினர் பழங்கால விளையாட்டுகளை அறிந்து ரசிக்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகம் உள்ளது.
இதுகுறித்து பேசிய அருங்காட்சியகத்தின் இணை நிறுவனர் மக்சிஸம் பினிகின் கூறுகையில், " இங்குள்ள ரெட்ரோ விளையாட்டுகள் மிகவும் புகழ்பெற்றவை. இதனை விளையாடுவதற்காக மக்கள் தினமும் வரிசைக் கட்டி நிற்கின்றனர். நான் எனது சிறுவயதில், இதுபோன்ற ஆர்கேட் விளையாட்டுகளில், நாணயத்தை போட்டு விளையாடியுள்ளேன். நாணயம் தீர்ந்த பிறகு பிறர் விளையாடுவதை கண்டு ரசிப்பேன். குறிப்பாக சோவியத் யூனியனின் முதல் ஆர்கேட் விளையாட்டான கடல் போர் (Sea battle) விளையாட்டு இயந்திரமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
அந்த கால மக்களுக்கு இதுதான் மிகவும் பிடித்தமான விளையாட்டு. சோவியத் யூனியனின் விளையாட்டு துறையின் அடையாளமாக இந்த விளையாட்டு உள்ளது. அதுமட்டுமல்லாது, மக்கள் மறந்து போன விளையாட்டுகளும் இங்கு உள்ளன. முதலில் இதுபோன்ற மறைந்த விளையாட்டுகளை கொண்டு அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்ட நாங்கள், மக்கள் பயன்படுத்தாத பூங்காக்கள், சோவியத் யூனியனின் கலாசார வீடுகள், பள்ளிகள், ராணுவத் துறைகளுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த உடைந்த விளையாட்டு இயந்திரங்களை கைப்பற்ற தொடங்கினோம்.
சில நேரங்களில் இதுபோன்ற விளையாட்டுகள் தற்போது பரவலாக விளையாடப்படுவதில்லை என்பதை எண்ணுகையில் மனது கனமாக இருக்கும்" என்றார்.