ஜெனீவா (சுவிட்சர்லாந்து):ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டின் மனித உரிமைகள் பிரச்னை தொடர்பாக விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சிறப்பு அமர்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி கூடவுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவைகளின் கோரிக்கைக்கு இணக்க, இந்த சிறப்பு அமர்வு கூட்டப்படவுள்ளது.
சிறப்பு அமர்வுக்கான கோரிக்கையை 89 நாடுகள் ஆதரித்துள்ளன. பெரும்பாலான பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொள்ள உள்ளனர்.
ஞாயிறு அன்று(ஆகஸ்ட் 15) ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடிபின்பு, தாலிபான்கள் காபூலை கைப்பற்றினர். நேற்றையதினம், ஆப்கான் அரசாங்கத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாகவும், பெண்கள் உள்ளிட்டவர்கள் அரசாங்கப்பணிக்கு திரும்பவேண்டும் எனவும் தாலிபான்கள் வலியுறுத்தியிருந்தனர்.
தங்களுடைய அரசு எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்து கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் தாலிபான்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:பெண் அடிமைத்தன அடையாளத்தை உடைக்க முயல்கிறதா தாலிபன்?