கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்று, தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகளை பிரிட்டன் நாட்டின் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் இரண்டு விழுக்காடு வரை சுருங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கோவிட்-19 பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் மார்ச் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு சரிவை சந்தித்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் இரண்டு விழுக்காடு வரை சுருங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்தநிலையின்போது, பிரிட்டன் கடுமையாக பாதித்தது. அதன்பின் பிரிட்டன் பொருளாதாரம் கண்டுள்ள மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 விழுக்காடு வரை சுருங்கியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் சேவை துறை சரிவை சந்தித்ததால் 2019ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுழியத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.