இங்கிலாந்தில் கரோனா தொற்று பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரவி குப்தா, இங்கிலாந்து கரோனா தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
கரோனா தொற்று மூன்றாவது அலை
இது தொடர்பாக பேசிய அவர், ஒப்பீட்டளவில் பார்க்கும்போது இங்கிலாந்து ஏற்கெனவே கரோனா தொற்று மூன்றாவது அலையின் பாதிப்பில்தான் இருக்கிறது எனவும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் முக்கால்வாசி பேரின் உடலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹன்டர், இங்கிலாந்தில் இந்த மாத தொடக்கதிலேயே மூன்றாவது அலையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்று இங்கிலாந்தில் பரவிவருவது தான் மூன்றாவது அலைக்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முற்றிலும் ஒழியுமா கரோனா?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவி குப்தா,'நான் நினைப்பது சரியானால், கரோனா தொற்று இங்கிலாந்தைவிட்டு போய்விடும். இந்த மூன்றாவது அலையுடன் அது முடிவுக்கு வரும். இது மிகப்பெரிய தொற்றாக இருக்கும். உயிரிழப்புகளும், தீவிரமான நோய்ப்பாதிப்பும் இருக்கும்’ என்றார்.
மூன்றாவது அலை, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும், அதைக் கட்டுப்படுத்த கரோனா தொற்று தடுப்புப் பணிகளை இரண்டு மடங்கு துரிதப்படுத்த வேண்டும்; அதைப் போலவே தடுப்பூசி போடும் பணிகளையும் இரட்டிப்பாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் ஊரடங்கு அவசியம்
இது தொடர்பாக பேசிய இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் தலைமை நிர்வாகி, கிறிஸ் ஹோப்சன்,’கரோனா தொற்று கணிசமாக அதிகரிக்காத வண்ணம், ஊழியர்கள் முழு வீச்சில் செயல்படுகிறார்கள். கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுவது நல்ல செய்தி. ஜூன் மாதம் 21ஆம் தேதி ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்தவுள்ள நிலையில், ஒரு விஷயம் தெளிவாகிறது. இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் அதிகம் பரவக்கூடியது என்பது எங்களுக்கு தெரியும்’ என்றார்.
இந்த மூன்றாவது அலையின் பாதிப்பை கட்டுப்படுத்த, ஜூன் 21ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை இன்னும் சில வாரங்களுக்கு தாமதப்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்சனை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவி குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
போதுமான நடவடிக்கை தேவை
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தொற்று நோயின் பரிணாமம் மற்றும் தொற்றுநோயியல் பிரிவில் பேராசிரியராக உள்ள டாக்டர் வில்லியம் ஹான்கே, இங்கிலாந்தில் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் இல்லை என்றும், ஜூன் மாதத்தில் ஊரடங்கை தளர்த்தினால் கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:மூணு வரைக்கு ஓகே... குடும்ப கட்டுப்பாடு விதிகளை தளர்த்திய சீனா; காரணம் என்ன?