ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸின் அடையாளமாகத் திகழ்கிறது ஈஃபில் டவர். 324 மீட்டர் உயரம் கொண்ட இந்த டவர் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இதைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கானசுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்த டவர் மீது இளைஞர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் ஏறத் தொடங்கினார். அவர் பாதியில் ஏறிக்கொண்டிருக்கும்போது அங்கிருந்தவர்கள் இதை கவனித்தனர். இதனால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்பு அலுவலர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்தினர்.
அதற்குள் அந்த இளைஞர் சுமார் 488 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தார். இதையடுத்து அந்த இளைஞரிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அந்த இளைஞர் தன்னை தடுத்தால் அங்கிருந்து குதித்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அந்த இளைஞரை காவல் துறையினர் பத்திரமாக கீழே இறக்கினர். அதன்பிறகு தற்காலிகமாக ஈஃபில் டவர் மூடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் திரும்பிச் சென்றனர்.
டவர் மீது ஏறிய இளைஞர் ஏற்கனவே 980 அடி கொண்ட கோபுரம் ஒன்றின் மீது ஏறியவர் என்பது பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.