கரோனா வைரசைக் (தீநுண்மி) கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதன்படி பயணத் தடை அமலில் உள்ளதால் ஏராளமான தொழில்கள் முடங்கி உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது. இதனால், பல நிறுவனங்கள் அதன் ஊழியர்களை கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம் செய்துவருகின்றன.
இந்நிலையில், கோவிட்-19 காரணமாக ஆறு இளைஞர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்துவருவதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அதிர்ச்சிக்குரிய செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பு மே 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "கோவிட்-19 பெருந்தொற்றால் இளைஞர்கள் மற்றவர்களைவிட பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிப்ரவரி மாதம் முதல் ஏறுமுகத்தில் உள்ள வேலையிழப்பால் இளைஞர்களைவிட இளம் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களில் இளைஞர்கள் வேலையிழப்பு விகிதம் 13.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இது மிகவும் அதிகம். உலகளவில் 26 கோடியே மூன்று லட்சம் இளைஞர்கள் (அதாவது ஆறில் ஒருவருக்கும் மேற்பட்டோர்) வேலையில்லாமலோ, படிப்பு, பயிற்சிகளைப் பெற முடியாமலோ தவித்துவருகின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்