கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் சீனாவில் தற்போது வெகுவாகக் குறைந்துவருகிறது. இருப்பினும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் மோசமாகியுள்ளது. நேற்று (மார்ச் 20) ஒரே நாளில் இத்தாலியில் 627 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, வியாழக்கிழமை (மார்ச் 19) வைரஸ் தொற்றால் 475 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அந்நாட்டில் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,032ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று நாள்களில் மட்டும் இத்தாலியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் முதியவர்கள் அதிகம் உயிரிழக்கிறார்கள் என்பதாலும் இத்தாலியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் உயிரிழப்புகள் அங்கு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உலகெங்கும் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 36.6 விழுக்காடு இத்தாலியில் மட்டும் ஏற்பட்டுள்ளது.