டெல்லி: டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே ஜன.29ஆம் தேதி சிறிய ரக குண்டு வெடித்தது.
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜன.29ஆம் தேதி குண்டுவெடித்தது. இது தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வெளியான தகவலில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உளவுத்துறை தலைவர் உயர் அலுவலர்களுடன் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளார். அடுத்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது. முதல் கூட்டத்தில், “குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள அமைப்புகள் அல்லது நபர்களை கண்டுப்பிடிப்போம். பாதுகாப்பு நிறுவனங்கள் துரிதமாக செயல்படவேண்டும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெய்ஷ்-உல்-ஹிந்த்
இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற அமைப்பு இருக்கலாம் எனத் தெரியவருகிறது. அந்த அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றன. இதற்கிடையில் இந்தக் குண்டுவெடிப்பில் ஈரானிய அமைப்புகள் ஈடுபட்டுள்ளதா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதையும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.