இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த மாதம் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை குவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இது குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களைத் திரும்ப பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் சீன வீரர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை அந்நாடு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கவலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடர்பாளர் எரி கனெகோ கூறுகையில், "எல்லைக் கட்டுப்பாடு கோட்டின் அருகே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலும், அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளும் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் இரு தரப்பும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவு செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமைதியை விரும்பும் இந்தியா, பதிலடி கொடுக்கவும் தயங்காது - சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை