அச்சுறுத்தும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்க உலகெங்கிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் உலகத் தொழிலாளர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது ஐ.நா. சபையின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு.
அந்த வகையில் இந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா ஊரடங்கு நெருக்கடி தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதுமுள்ள 330 கோடி தொழிலாளர்களின் வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைந்துவருகிறது. அதன்படி,
- ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் 80 விழுக்காடு,
- ஐரோப்பா, மத்திய ஆசியாவில் 70 விழுக்காடு,
- ஆசியாவில் 21.6 விழுக்காடு
அளவிற்கு தொழிலாளர்கள் தங்களது வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
சில்லறை வணிகம், உற்பத்தி போன்ற துறைகளில் 43 கோடி நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. தொழிலாளர்களையும், சிறு நிறுவனங்களையும் காக்க துரித நடவடிக்கைகள் அவசியம்.
ஊரடங்கில் தளர்வளிக்கத் தொடங்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய மீண்டும் தொழில்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
அப்படி பணிக்குத் திரும்பும் தொழிலாளர்களிடம் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள்:
- பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தும்போது அது தங்குதடையின்றித் தொடர, பணியிடங்களில் தொழிலாளர்கள் தங்களது பாதுகாப்பை உணரும் வகையில் வழிவகை செய்துதர வேண்டும்.
- கோவிட்-19 பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சங்களுக்கு அவர்கள் உள்ளாகாமல் இருக்க வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
- வருமானமின்மை, உணவின்மை, பாதுகாப்பற்ற நிலை, சேமிக்க இயலாத நிலை, கடன் வாங்கும் சூழல் ஆகியவை ஏற்படாத வகையில் பொருளாதார நடவடிக்கைளை மேற்கொள்ள மீண்டும்.
- பணியாற்றவரும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும்; அதற்கான சூழலை உருவாக்கித் தர நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும்.
- பொருளாதார வீழ்ச்சியிலிருந்து உலகை மீட்க தொழில் துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தொழிலாளர்கள் தேவையற்ற இடர்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
- புதிய நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென கோரும் அதே நேரத்தில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளின் உடல்நலத்தையும் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வயதானோர், கர்ப்பிணிகள், அகதிகள், வெளிநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள், முறைசாரா தொழில் துறையில் உள்ள தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் நிலைமையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
- பணிக்குத் திரும்புபவர்களின் பாலினம், சுகாதார நிலை தொடர்பான பாகுபாட்டை உருவாக்காது என்பதை உறுதிப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தைச் சீரான முறையில் மீட்டெடுக்க, தொழிலாளர்கள் கொடிய தீநுண்மியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் புதிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.