சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகர் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது கோவிட்-19 சீனாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இருப்பினும், தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிவருகிறது. வளர்ந்து நாடுகளாகக் கருதப்படும் ஐரோப்பிய நாடுகள்கூட வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்களைச் சந்தித்துவருகின்றன.
இந்த வைரஸ் தொற்றுக்கு காதலர்களின் தேசமான ஃபிரான்ஸும் விதிவிலக்கு அல்ல; நேற்று மட்டும் 7,578 பேருக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 52 ஆயிரத்து 128 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது 22 ஆயிரத்து 757 பேர் வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 5,565 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஃபிரான்ஸ் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கோவிட்-19 வைரஸ் தொற்றால் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 499 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஃபிரான்ஸ் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,523ஆக உயர்ந்துள்ளது.
ஃபிரான்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மட்டுமே உள்ளடக்கியது. கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளிலும் முதியோர் இல்லங்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - இத்தாலியில் தொடரும் கோர தாண்டவம்