கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. கரோனா பரவல் காரணமாக இந்த நாடுகளில் விரைவாகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த பிரான்ஸ் இந்த ஊரடங்கால் பெரும் இழப்பைச் சந்தித்தது. காதலர்களின் தலைநகரான பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரமும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கரோனா தாக்கம் குறைந்துவருவதால், சுற்றுலாத்துறையை மீண்டும் உயிர்ப்பிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உணவகங்களையும் விடுதிகளையும் முன்கூட்டியே திறக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கரோனா பரவல் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த ஈபிள் கோபுரம் வரும் ஜூன் 25ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக போருக்குப் பின்னர், ஈபிள் கோபுரம் அதிக நாள்கள் இந்த கரோனா காரணமாகவே மூடப்பட்டது.