உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவ எமர்ஜென்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஹெச்ஐவி நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆண்டிரெட்ரோ சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக, எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடும் என, உலக சுகாதார நிறுவனம், யுஎன்-எய்ட்ஸ் ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெட்ரோஸ் அதனோம் பேசுகையில், '' எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த வரலாறுகள் உள்ளன. இந்த அறிவிப்பை உலகம் முழுவதும் உள்ள சுகாதார மையங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்க வேண்டும். சில நாடுகளில், ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஆப்பிரிக்கா மற்றும் அதன் சுற்று வட்டார நாடுகளில் 25.7 மில்லியம் மக்கள் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16.4 மில்லியன் மக்கள் ஆண்டிரெட்ரோ சிகிச்சைப் பெற்றுவந்துள்ளனர். தற்போது, நிலவி வரும் கரோனா வைரஸ் சூழலால், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.