ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு அக்டோபர் 31ஆம் தேதி பிரிட்டன் வெளியேறுகிறது. இதனை பிரெக்ஸிட் (Britian + Exit = Brexit ) என்று அழைக்கிறார்கள்.
பிரிட்டன் வெளியேற்றத்தை சுமூகமானதாக்க ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரிட்டன் அரசு 'பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தம்' போட்டுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் எம்பிக்களின் ஆதரவைப் பெறமுடியாத காரணத்தால், தெரசா மே தன் பிரதமர் பதவியிலிருந்து கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, தெரசா மே பாதியில் விட்டுச் சென்ற பிரெக்ஸிட்டை முடித்துவைக்க பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளருமான போரிஸ் ஜான்சனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுத்து.
ஆனால், புதிதாக பதவியேற்ற பிரதர் போரிஸ் பிரிட்டன் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட்டை (No Deal Brexit) நோக்கி அந்நாட்டை நகர்த்தி செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனிடையே, பிரெக்ஸிட் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளாதக்கூறி பிரிட்டன் நாடாளுமன்றத்தின் செப்டம்பர் கூட்டத்தொடரை ஒருமாதம் முடக்குவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார்.
இது பிரிட்டன் எம்பிக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரிட்டன் வீதிகள் போரிஸ் ஜான்சனுக்கு எதிரான போராட்டக்களமாக மாறின.