லண்டன்: தான் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னைத் தானே மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இங்கிலாந்தின் டவுன் தெருவில் உள்ள அலுவலகத்தில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டர்சன் உள்ளிட்ட சிலரை சந்தித்தார். இந்நிலையில் அதில் ஆண்டர்சனுக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து போரிஸ் ஜான்சன் தன்னைத் தானே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில், “பிரதமர் போரிஸ் ஜான்சன் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு கோவிட்-19 அறிகுறிகள் தென்படவில்லை” எனவும் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், “நவம்பர் 26ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டர்சனுடன் போரிஸ் ஜான்சன் 35 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஆண்டர்சன் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “இந்த வெள்ளிக்கிழமை நான் சுவையை இழந்தேன். என் மனைவி தீராத தலைவலியால் அவதிப்படுகிறாள். எனக்கு இருமல், காய்ச்சல் இல்லை. நன்றாகத்தான் இருக்கிறேன். சனிக்கிழமை எனது மருத்துவ அறிக்கை வந்தது. நானும் எனது மனைவியும் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனினும், நாங்கள் நலமுடன் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக போரிஸ் ஜான்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஏற்கனவே கரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர் போரிஸ் ஜான்சன் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: பிரெக்ஸிட்டை இனி யாராலும் தடுக்க முடியாது - பிரிட்டன் பிரதமர் சூளுரை