கோவிட்-19 தொற்றுக்கு இதுவரை உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்றுக்கு சிகிச்சையளிக்க இதுவரை தடுப்புமருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தத் தடுப்பு மருந்தின் முடிவுகள் இதுவரை சிறப்பாக உள்ளதால், விரைவில் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்தக் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஒருவர் திடீரென்று நரம்பியல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டார்.
இதனால் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வந்த மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், இது குறித்து விசாரிக்க சுதந்திரமாக செயல்படும் விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.