பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க மாமல்லபுரம் வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங், இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு நேபாளம் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாள நாட்டு தலைநகர் காட்மாண்டுக்கு விமானம் மூலம் சென்றடைந்தார்.
ஜின்பிங்கிற்கு பீரங்கி குண்டுகள் முழங்க, கலைநிகழ்ச்சிகளுடன் நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி குடியரசு துணைத் தலைவர் நந்தா பகதூர், பிரதமர் கே.பி. சர்மா ஓலி ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர். இதையடுத்து, நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார்.
அதில் இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு, தீவிரவாத ஒழிப்பு, எல்லைப்புற பிரச்சினைகள், வர்த்தகத்தில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர். அப்போது ஜி ஜின்பிங் பேசுகையில், நேபாளத்தின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு சீனா எப்போதும் ஆதரவளிக்கும் என்றார்.