உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் பாகிஸ்தானில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இதுவரை பாகிஸ்தானில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 54 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 133 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அந்நாட்டு மக்களைக் காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்துவரும் நிலையில் பாகிஸ்தான் அரசு பன்னாட்டு உதவிகளை கோரி வருகிறது. தொடர்ந்து ஆசிய வங்கி, பன்னாட்டு நிதி மையம் உள்ளிட்டவற்றின் உதவிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனையடுத்து தொற்று நோய்யை எதிர்கொள்ள சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் குறைந்த வட்டிவிகிதத்தோடு அவசரக் கடன் அளிக்க ஏப்ரல் மாதம் 23ஆம் தேதியன்று ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானின் வரவு செலவுத் திட்ட த்தின் மீது கவனம் செலுத்தி, அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கவும் கரோனா தாக்கத்தை தணிக்கவும் இந்த கடனை வழங்க உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு அளிக்கக்கூடிய சலுகையை அந்நாட்டு அரசு உரிய வகையில் பயன்படுத்துமா என்பதில் ஐயம் இருப்பதாக கடன் வழங்குவது தொடர்பிலான கூட்டத்தில் குழுவினர் எச்சரித்ததாக அறிய முடிகிறது.
எவ்வாறாயினும், பாகிஸ்தானின் கடன் கொள்கை ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மறுசீரமைத்தல், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய தேசிய நிதி கட்டமைப்பை அமல்படுத்துவது போன்ற நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சிக்கல் எழுந்ததால் அது தாமதமானது.
பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்! இருப்பினும், பல்வேறு சட்டங்களில் சில திருத்தங்களுக்கு உட்பட்டு நிலையான பொருளாதாரத்திற்கான நெகிழ்திறன் நிறுவனங்கள் (RISE) திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாக வழங்கும் திட்டம் வரைவு அடுத்த மாதம் உலக வங்கி வாரியத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :பாகிஸ்தானில் 50 ஆயிரத்தை கடந்த கரோனா பாதிப்பு!