இஸ்லாமபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜூலை 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாரர் கல் பகுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
பிரதான எதிர்க்கட்சியான முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் மரியம் நிவாஸ், ஜூலை 18ஆம் தேதி நடந்த தேர்தல் பரப்புரையில், காஷ்மீரை ஒரு மாகாணமாக மாற்ற அரசு முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐநா தீர்மானம்
அதற்கு விளக்கமளித்து பேசிய இம்ரான் கான், "இது போன்ற யூகங்கள் எங்கிருந்து கிளம்புகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை, காஷ்மீரை மாகாணமாக மாற்றும் எண்ணம் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானுடன் இணைந்திருக்கலாமா? அல்லது தனிநாடாக இருக்கலாமா என்பதை காஷ்மீர் மக்கள் முடிவு செய்ய அனுமதிப்போம். ஐநா மன்ற தீர்மானத்தின்படி, பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைவார்கள்" என நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் வாக்கெடுப்பு
ஐநா பொதுவாக்கெடுப்புக்கு பிறகு, காஷ்மீர் இணைந்திருக்கலாமா அல்லது தனிநாடாகலாமா என்பதை தீர்மானிக்க பாகிஸ்தான் அரசு ஒரு வாக்கெடுப்பு நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை முன்னதாக இந்திய தெளிவுபடுத்தியுள்ளது. காஷ்மீர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை இந்தியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் 64 திருத்தங்கள் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை