தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2020, 8:04 AM IST

ETV Bharat / international

'ஐநா ஊழியர்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பு மருந்து'- ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் V என்ற கரோனா தடுப்பு மருந்தை ஐநா ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் இலவசமாக வழங்க தயாராகவுள்ளதாக ரஷ்யா அதிபர் புதின் அறிவித்துள்ளார்.

Vladimir Putin
Vladimir Putin

உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் எதையும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கவில்லை. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் கரோனாவுக்கு தாங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா கடந்த மாதம் அறிவித்தது. ஜூன் மாதம்வரை தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சிகளை தொடங்காத ரஷ்யா, இரண்டு மாதங்களில் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது.

இந்தத் தடுப்பு மருந்தின் பாதுகாப்புத்தன்மை குறித்து உலக நாடுகளின் பல ஆராய்ச்சியாளர்களும் கேள்வி எழுப்பினர். இருப்பினும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ரஷ்யா தொடர்ந்து அடுத்தடுத்து தேவையான பணிகளில் இறங்கிவிட்டது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு விழாவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஐநா ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் ஸ்புட்னிக் V தடுப்புமருந்தை இலவசமாக வழங்க ரஷ்யா தயாராகவுள்ளதாக கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், "ஐக்கிய நாடுகள் சபை, அதன் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் என யாரும் இந்த கரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. எனவே, ஐநாவின் ஊழியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் தேவையான கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்க ரஷ்யா தயாராக உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் சிலர் எங்களிடம் இது குறித்து கேட்டனர். அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை ஏற்குமா என்பது குறித்து அந்த அமைப்பு இதுவரை எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

முன்னதாக, இந்தத் தடுப்பு மருந்தின் பாதுகாப்புதன்மை குறித்து ஆராய்ச்சியாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தின் முதல் இரண்டுகட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள், ’தி லான்செட்’ இதழில் (The Lancet journal) வெளியிடப்பட்டது. அதில் ஸ்புட்னிக் V பாதுகாப்பானது என்றும் அது உடலில் தேவையான ஆன்ட்டிபாடிகளை தூண்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா தடுப்புமருந்து பரிசோதனையை தொடங்கிய பாகிஸ்தான்!

ABOUT THE AUTHOR

...view details