அல் ஆசியா மில்ஸ் ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நவாஸ் ஷெரீப், உடல் நிலை மோசமானதன் காரணமாக, லண்டனில் சிகிச்சைப் பெறுவதற்காகப் பிணையில் சென்றார். மேலும் லண்டனில் பெற்றுவரும் சிகிச்சை விவரங்களை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு மற்றும் நீதிமன்றத்திடம் தொடர்ந்து, சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே 1986ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நான்கு வார சிகிச்சை பெறுவதற்காக, லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், இன்று வரை பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை. இதனால் இவரை நாட்டைவிட்டு தப்பி ஓடியவர் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.