கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநரின் கான்வாயை (convoy) தற்கொலை படையினர் தாக்கியதில் நான்கு பொதுமக்கள் உள்பட எட்டு பேர் உயிரிழந்ததாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
லக்மான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் ஆளுநர் ரஹ்மத்துல்லா யர்மல் காயமடையவில்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் அசாதுல்லா தவ்லட்சாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் அசாதுல்லா கூறுகையில், "மாகாண தலைநகரான மிஹ்தெர்லாமில் நடந்த இந்தத் தாக்குதலில் சுமார் பாதுகாப்புப் படை, பொதுமக்கள் என 38 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் குழந்தைகள் உள்பட 36 பொதுமக்களும், ஆளுநரின் இரண்டு மெய்க்காப்பாளர்களும் அடங்குவர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள் உள்பட அனைவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு யாரும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இஸ்லாமிய அரசு குழு மற்றும் தலிபான் இருவரும் இப்பகுதியில் தீவிரமாக உள்ளனர்.
ஆப்கானிய அரசு பிரதிநிதிகள், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு எதிராக இரு குழுக்களும் கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளன" எனத் தெரிவித்தார்.