1962-ம் ஆண்டு மெல்பர்ன் அருகில் உள்ள எஸ்ஸென்டென் என்ற இடத்தில் ஒரு குழந்தை பிறந்தது. தாய், தந்தை இரண்டு பேருக்கும் வனவிலங்குகள் மீது இருந்த ஆர்வம் குழந்தைக்கும் தொற்றிக் கொண்டது. ஆறு வயதில் இருந்தே, தன் உயரத்தைவிட பலமடங்கு நீளம் கொண்ட விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளுடன் விளையாடத் தொடங்கிய அந்த குழந்தையை, பின் நாளில் விலங்குகளின் காதலனாகவும், விலங்கின ஆர்வலராகவும் வளர்த்தெடுத்தது இயற்கை. ஸ்டீவ் இர்வின் என்ற பெயரை தெரியாத 90ஸ் கிட்ஸ்களிடம், "முதலைகளோடு விளையாடும் காக்கி டிரவுசர்காரர்" என்று சொன்னால் அடையாளம் தெரிந்து கொள்வார்கள். இவர் முதலைகளோடும், பாம்புகளோடும், உடும்புகளோடும் விளையாடும் நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம்.
தி க்ரோக்கடைல் ஹன்ட்டர்' என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் வன விலங்குகளை நமக்கு நெருங்கியவையாக மாற்றினார். வனவிலங்கு என்றால் கொடூரமானது, வேட்டையாடி உண்பது என்ற செவி வழி செய்தி நம் மனதில் ஆழமாக பதிந்துபோன நிலையில், முதலை, பாம்புகளை கட்டிப்பிடித்து விளையாடி மகிழ்ந்த இந்த மனிதனைக் கண்டு அந்த கால குழந்தைகள் திகைத்து போயினர். உடும்புகளை காத்திருந்து, பின் தொடர்ந்து வேட்டையாடுவது போல் இவர் பிடிக்கும் காட்சிகள், ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்ப்பது போல் நம் இதயத்தை திக் திக் என படபடக்க வைக்கும். இது அத்தனையிலும் சிறப்பு, அவர் பிடித்த அந்த வனவிலங்கை பாசம் கொஞ்சி, அதன் சிறப்பம்சங்களை விளக்கிவிட்டு பின்னர் அதன் போக்கில் அதை விட்டுவிடுவார் என்பதுதான். இப்போது வரும் சில நிகழ்ச்சிகளில் காணப்படும் நபர்களை போல அவற்றை அவர் சுட்டுத் தின்பது இல்லை.
அந்த விலங்குகளை அவர் கையாளுவதில் தனக்கு ஏதும் ஆகிவிட கூடாது என்பதைவிட அந்த விலங்குகளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற கவனமே அதில் அதிகளவு காணப்படும். இவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணும் விலங்குகள் மீது ஆர்வம் கொண்டவர்தான். ஸ்டீவ் மற்றும் அவரது மனைவி டெர்ரி இர்வின் இருவரும் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சிகள், டிஆர்பி-யில் உச்ச புள்ளிகளை பெற்றன.வனவிலங்குகள் மட்டும் இல்லாமல், கடல் வாழ் விலங்குகளின் மீது அன்பு செலுத்திய இந்த மனிதன், அந்த விலங்குகளால் இறந்தார் என்ற செய்தியே மிக பெரிய சோகம். முதலை, பாம்பு என ஆபத்தான விலங்குகளுடன் அசால்ட்டாக விளையாடிய இர்வின் ஸ்டிங்ரே என்னும் சிறிய வகை மீனின் தாக்குதலால் பலியானார். கடலுக்கு அடியில் என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துக்கொண்டிருந்த போதுதான் அவர் மரணமடைந்தார்.
ஆனால் தற்போது அவரின் மனைவி டெர்ரி இர்வின் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ராபர்ட் இர்வின் மற்றும் பின்டி இர்வின் ஆகிய மூவரும் சேர்ந்து 'ஆஸ்திரேலியா ஜூ' என்ற பெயரில் இர்வினின் விலங்குகளை சிறப்பாக பாதுகாத்து வருகின்றனர். அதன் மூலம் பல விலங்குகளையும் பராமரித்து வருகின்றனர். இன்று அவருக்கு 57-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், ஒரு புதிய 'கூகுள் டூடுலை' வடிவமைத்துள்ளது.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல என்பதை எந்த விதத்தில் சொன்னாலும், அன்பை எதன் மீது செலுத்தினாலும், அது நம்மை காலம் கடந்து பிறர் நெஞ்சில் நிலைத்து இருக்கச் செய்யும் என்பதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணம்தான் இந்த ஸ்டீவ் இர்வினும்... இன்றும் நம் நினைவில் நீங்காமல் இருக்கும் அவரது நினைவுகளும்...