யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள மிருசுவில் பகுதியில் 5 வயது குழந்தை உட்பட 8 தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கரோனோ வைரஸ் பெருந்தொற்று பரவி வரும் சூழலில் சிறையில் கரோனோ வைரஸ் தொற்று ஏற்படலாமென காரணம் தெரிவித்து கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இன்று சுனில் ரத்நாயக்கவினை விடுதலை செய்துள்ளனர்.
யுத்த காலத்தில் முன்னெடுத்த சிறந்த சேவை, நன்னடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை ஆணையாளர் ஜயசிறி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த படுகொலையில் ஈடுபட்ட ராணுவத்தினரை கைது செய்யக்கோரி மனித உரிமை அமைப்புகள், தமிழர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்த அழுத்தத்தின் காரணமாக ரத்நாயக்க உள்ளிட்ட 14 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களில் 13 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் தேதி ரத்நாயக்கவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கரோனா தொற்று : 8 தமிழர்களை கொன்ற சிங்கள இராணுவ சிப்பாயை விடுதலை செய்த இலங்கை அரசு! இந்நிலையில், இலங்கையில் கரோனோ வைரஸ் பெருந்தொற்று பரவி வரும் காரணத்தை மேற்கோள் காட்டி அவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தனது தேர்தல் வாக்குறுதியில் சிறிசேனா ஆட்சியில் தண்டனை பெற்ற ராணுவ வீரர்கள் அனைவரையும் விடுவிப்பதாக தற்போதைய இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபக்ச கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :கரோனா லாக்டவுன் - ஊரே ஒன்றுக்கூடி சிறுமிக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து!