தென் கிழக்கு ஆசியாவின் மிக ரம்மியமான சூழல் கொண்ட நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இங்கு சொத்துக்களை வாங்கி குவிக்க வெளிநாட்டினர் பலரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு ஜூலை மாதம் சொத்துக்கள் மீதான முத்திரை வரியில் சில மாற்றங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டது. இதன் விளைவாக சொத்துக்களின் மதிப்பு குறைந்தது. இந்தாண்டு இதே நிலைமைதான் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்து வெளிநாட்டினர் பலரும் சிங்கப்பூரில் வீடுகளை வாங்கி வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, சொத்துக்களை அதிகளவில் வாங்குவதில் முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் மலேசியாவும், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியாவும், நான்காவது இடத்தில் இந்தியாவும், ஐந்தாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது.
சிங்கப்பூர் அரசின் கட்டுப்பாடுகள் படி வெளிநாட்டினர் அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே வாங்க முடியும். நிலத்துடன் சேர்ந்து வீடுகளை வாங்க வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை. எனினும், சென்டோசா கோவ் தீவில் சிறப்பு அனுமதியுடன் வெளிநாட்டினர் சொத்துக்களை வாங்க அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சென்டோசா தீவில்தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க அமெரிக்க - வடகொரியா இடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.