கரோனா பரவல் காரணமாக உலகளவில் பொது முடக்கம் பல்வேறு கட்டங்களாகப் பின்பற்றப்படும் நிலையில், சவுதி அரேபிய தற்போது முக்கியத் தளர்வை அறிவித்துள்ளது. அதன்படி, அந்நாட்டிற்கு வெளிநாட்டினர் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா கடந்த மார்ச் மாதத்திலிருந்து கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. உள்ளூர்வாசிகளைத் தவிர வெளிப் பார்வையாளர்கள் யாரும் மெக்காவுக்கு வர சவுதி அரசு தடைவிதித்திருந்தது.
கடந்த ஏழு மாத காலமாக மெக்காவில் கட்டுப்பாடுகள் அமலிலிருந்த நிலையில் அங்கு தற்போது இந்தத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 4ஆம் தேதிமுதல் உம்ரா சிறப்புத் தொழுகைக்காக ஆறாயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக அக்டோபர் 18ஆம் தேதி முதல் 15 ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது கட்டமாக வெளிநாட்டுப் பார்வையாளர்களும் வரலாம் என சில விதிமுறைகளுடன் உத்தரவு வெளியாகியுள்ளது.
அதன்படி, 18-50 வயதுக்குள்பட்ட வெளிநாட்டினர் வரும் ஞாயிறு (நவ. 1) முதல் சவுதி அரேபியா வரலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று நாள்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் தங்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு தொற்று இல்லை என உறுதிசெய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை மூன்று லட்சத்து 35 ஆயிரத்து 997 பாதிப்புகளும் நான்காயிரத்து 850 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க:இனிமே டிக்டாக் எல்லா இங்க பேன்...தடை விதித்த பாகிஸ்தான் காவல் துறை!