கோவிட்-19 தடுப்பூசியான ’ஸ்புட்னிக் V’யின் 100 மில்லியன் டோஸ் மருந்தை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு வழங்குவதற்கு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கையை இன்று (செப்.16) உறுதிசெய்துள்ள RDIF , "ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ் லிமிடெட் உடன் இணைந்து, கரோனா மருத்துவப் பரிசோதனைகள், இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளது.
மேலும் ஒப்பந்த அடிப்படையில், டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்தை RDIF வழங்க உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மருந்து விநியோகப் பணிகள் 2020ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மருந்து குறித்த முதல், இரண்டாம் கட்ட சோதனை முடிவுகள் திருப்திகரமாக உள்ளதாகவும், மூன்றாம் கட்டப் பரிசோதனைகளை விரைவில் நடத்தப்பட உள்ளதாகவும் டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் இணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.