சீன மாநகரமான சென்சென்னுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கே மின்சார வாகனங்களின் வருகையால் புரட்சிகர மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பெரு நகரங்களில் கனரக வாகனங்களால் நிகழும் காற்று மற்றும் ஒலி மாசு பற்றி சிந்தித்துப் பாருங்கள். மெட்ரோ ரயில் வசதிகள் நிறைந்த நகரங்களிலும் இந்தத் தொல்லை இருக்கிறது. ஆனால் சென்சென் மாநகரத்தின் கதை இதற்கு நேரெதிராக இருக்கிறது. இங்குள்ள போக்குவரத்துத் துறை உலகத்துக்கே முன்னோடியாக திகழ்கிறது. 100% மாசற்ற போக்குவரத்து நகரமாக சென்சென் விளங்குவதற்கு காரணம், அதன் போக்குவரத்துத் துறை மின்சார பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டதே ஆகும்.
அரசாங்கத்தின் முன்னெடுப்பு
40 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்ஹாங் அருகேயுள்ள சாதாரண மீன்பிடி கிராமமாக அறியப்பட்ட சென்சென், இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் பெருநகரமாக உருவெடுத்துள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 2 கோடி ஆகும். மாசற்ற நகரமாக இதனை மாற்ற முடிவு செய்த சீன அரசாங்கம், சரியான திட்டமிடலின் மூலம் 10 ஆண்டுகளில் அதனை முடித்தும் காட்டியிருக்கிறது.
17 ஆயிரம் பேருந்துகள், 20 ஆயிரம் டாக்சிகள் உள்ள சென்சென் நகரில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தனது சொந்த வாகனத்தில் பயணிக்கக் கூடியவர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்சென் மக்கள் அங்கு வெளியே பயணிக்கவே அஞ்சும் சூழல் ஏற்பட்டது. காற்று மாசு அங்குள்ள மக்களை மிகவும் அச்சுறுத்தியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு முயற்சிகளை செய்த சீன அராங்கம், 2011ஆம் ஆண்டு தங்களின் முதன் மின்சாரப் பேருந்தினை அறிமுகம் செய்தது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு மின்சார வாகனங்களின் வரவு அதிகரித்தது. சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக, மின்சார பேருந்துகளில் பயணிக்கத் தொடங்கினர். கடந்த 10 ஆண்டுகளில் சென்சென்னில் அபரிமிதமான மாற்றம் நிகழ்ந்துள்ளது.
காற்று மற்றும் ஒலி மாசற்ற சென்சென்னில் வசிக்கும் மக்கள் மனநிறைவுடன் இருக்கின்றனர். மின்சார வாகனங்களின் வரவால் ஆண்டுக்கு 1.60 லட்சன் டன் கரி, 4.5 மில்லியன் டன் கரியமில வாயு சுற்றுச்சூழலில் கலக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் நைட்ரஜன் ஆக்சைட் மற்றும் ஹைட்ரோகார்பன்களின் உமிழ்வு குறைந்துள்ளது. மின்சார வாகனங்களுக்காக சீன அரசாங்கம் 18 லட்சம் யுவான் செலவு செய்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1. 85 கோடி ஆகும். அதேபோல் மின்சார வாகனங்களை பிரபலப்படுத்த, டிக்கெட் கட்டணங்களை அதிரடியாக குறைத்திருந்தது.
மின்சார வாகனங்களை இயக்குவதில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய, சென்சென்னில் உள்ள 180 பேருந்து இடங்களில் சார்ஜிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 200 கிமீ பயணிக்க முடியும். பேருந்துகள் மட்டுமல்லாம் மின்சார கார்களுக்கும் இங்கு சார்ஜ் செய்யப்படும். மொபைல் அப்ளிகேசன் மூலம் எந்தெந்த இடங்களில் சார்ஜ் செய்யும் நிலையங்கள் உள்ளதென ஓட்டுநர்களால் பார்க்க முடியும். சென்செனின் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்ட சீன அரசாங்கம், இந்த மின்சார வாகன திட்டத்தை 30 பெருநகரங்களில் அமல்படுத்தும் யோசனையில் உள்ளது. சென்செனின் மாற்றத்தைக் கண்டு லண்டன், நியூயார்க் போன்ற பெருநகரங்களும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் மின்சார வாகன திட்டத்தை முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளன.