டெல்லி: லடாக் எல்லையில் இந்திய – சீனப் படைகள் மோதல் வெடித்து பதற்றம் உருவாகியுள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய சென்றிருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வகை நீண்ட தூரம் தரையிலிருந்து வான் தாக்குதல் நடத்தும் ஏவுகணையை இந்தியா கொள்முதல் செய்யும் விவகாரம், இந்த பயணத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018ம் ஆண்டு புதுடெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையில் நடந்த இந்திய – ரஷ்ய உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தையில், 5.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த எஸ்-400 ரக ஏவுகணை ஒப்பந்தம் உலக நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் எதிரிகளை எதிர்கொள்ள வகை செய்யும் சட்டத்தை (சிஏஏடிஎஎஸ்ஏ) 2018 ஜனவரி மாதம் அமெரிக்க அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரிய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மற்றும் சிரியாவில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், 2016 அமெரிக்கத் தேர்தலில் தவறான முறையில் தலையிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க செனட்டர்கள் குழு, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
சாதனங்கள்,வரும் அக்டோபர் 2020 தொடங்கி ஏப்ரல் 2023க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், உலகளவில் இந்த சாதனத்திற்கான ஒப்பந்தங்களின் மதிப்பு 16 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருப்பதாதாகக் கூறியுள்ள ரஷ்யா, 2025ஆம் ஆண்டில் அவற்றை விநியோகிப்பதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது லடாக் எல்லையில் இந்திய -சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியால், ஆயுதங்களை விரைந்து ரஷ்யாவிடமிருந்து பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதே ஆயுதங்களை ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கிவிட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த திங்களன்று மாஸ்கோ புறப்படுவதற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள ராஜ்நாத்சிங், “இந்திய -ரஷ்ய ராணுவம் மற்றும் போர்த்திறன் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.