சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சத்தை கண்டது போல, கரோனாவால் அறிவிக்கப்பட்ட நீண்ட ஊரடங்கிலிருந்து உலகம் மெல்ல மெல்ல மீண்டுவருகிறது. நோயச்சம் இருந்தாலும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர். சில நாடுகளில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகவுள்ளனர். பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திவரும் வேளையில், அரசாங்கங்கள் பொருளாதாரச் சிக்கலை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளது. ஆனால் தற்போதுள்ள இயல்பு நிலை, கடந்த காலத்தைப் போல இல்லை.
கரோனா வைரஸ் பரவலால் அனைவரும் முகக்கவசம் அணிவது, கைகுலுக்குவது மற்றும் அருகில் அமர்வதை தவிர்ப்பது இயல்பாகியுள்ளது. மக்கள் அச்சமற்று இருப்பது நோய்த்தொற்று கட்டுக்குள் வந்திருப்பதற்கான அறிகுறி என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தற்போது வரை கரோனா தொற்று தடுப்பூசி ஆராய்ச்சியில் நம்பிக்கை அறிகுறிகள் ஏதுமில்லை.
நோய் தொற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகள், ஊரடங்கை தளர்த்த விரும்புபவர்கள், கரோனாவை விட பசிக் கொடுமை மோசமானது என்பதை உணர்ந்துள்ளனர். வைரஸ் பரவும் இந்த சூழலில்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்பதை உலக தலைவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். சிவப்பு மண்டலங்கள் மட்டும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக தொடர்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில், நோய் பற்றிய விழிப்புணர்வும், அதிகப்படியான மருத்துவ வசதிகளும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்திருக்கிறது. உலகளவில் அலுவலகங்கள் அனைத்தும் புதிய விதிமுறைகளோடு திறக்கப்பட தயார் நிலையில் உள்ளன. சுழற்சி முறையில் பணியாளர்கள் வேலைக்கு செல்லவிருக்கின்றனர். மென்பொருள் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணி செய்பவர்கள் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன.
சில நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை திறப்பது பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பள்ளிகள் திறக்காத வேளையில், பணிபுரியும் பெற்றோர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதுவே ஜெர்மனியும், டென்மார்க்கும் பள்ளிகளை திறந்ததற்கான காரணமாகும். ஸ்வீடன் அரசு இதுவரை பள்ளிகளை மூடவில்லை என தெரிகிறது. ஆனால் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி பள்ளி நிர்வாகத்தை செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆஸ்திரியா இந்த வாரம் பள்ளிகளை திறக்கவுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, திங்கள் முதல் புதன் வரை ஒரு குழுவும், வியாழன் மற்றும் வெள்ளி வரை ஒரு குழுவும் வகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தங்கி பயில விரும்புபவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் உண்டு. பல நாடுகளில் 40 பேர் அமரும் வகுப்புகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் நியஸ்த்ரலிட்ஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு சுயபரிசோதனை செய்து கொள்ளும் கருவியை வழங்கியுள்ளது.
இந்தியாவில் கோடை காலம் என்பதால், பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. பத்து மற்றும் மேல்நிலை வகுப்புகளின் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. பல்கலைக்கழகங்கள் பலவும் ஆன்லைனில் வகுப்பெடுத்து வருகின்றன.
விழாக்கள் அல்லது நிகழ்வுகளில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது என ஜெர்மனி அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் இதேபோன்ற நிபந்தனைகளை விதித்துள்ளன. திங்கள் அன்று பிரான்ஸ் அரசாங்கம் தனது ஊரடங்கு விதியை தளர்த்தியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரான்ஸ் மக்கள் அனுமதியின்றி வீடுகளை விட்டு வெளிவரத் தொடங்கியுள்ளனர். பாரிஸ் மெட்ரோ ரயிலின் இருக்கைகள், தகுந்த இடைவெளியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன. ஸ்பெயினிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரிய தலைநகரம் வியன்னாவில் கட்டப்பட்டுள்ள ஒரு பூங்கா, தகுந்த இடைவெளியை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுள்ளது. ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் ஒரு கதவு உண்டு, ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதன் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் தங்கள் நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.