தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு மரண தண்டனை ஏன்? - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வெஸ் முசாரஃப் மரண தண்டனை

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு குறித்து விவரங்களைச் சுருக்கமாகக் காணலாம்.

Pervez Musharraf
Pervez Musharraf

By

Published : Dec 17, 2019, 9:18 PM IST

Updated : Dec 17, 2019, 10:09 PM IST

முஷாரஃப் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்ததுஏன்?

2001ஆம் ஆண்டு முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த முஷாரஃப், தன் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நாட்டில் 2007ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.

இதன்மூலம் பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக முஷாரஃப் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு எதிராக 2013 ஜூன் மாதம் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அதே ஆண்டு நவம்பர் மாதம் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றியது. தொடர்ந்து, டிசம்பர் மாதம் முஷாரஃப் மீது அதிகாரப்பூர்வாக தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையைத் தொடங்கியது.

பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 6இன்படி, அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவோ அதனை வலுக்கட்டாயமாக ரத்து செய்யவோ முற்படும் நபர்கள் தேசத்துரோக குற்றவாளிகள் ஆவர்.

தேசத்துரோக வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் தேசத்துரோக தண்டனை சட்டம் (1973) தெரிவிக்கிறது.

தீர்ப்பு வர ஏன் இத்தனை ஆண்டுகள் ஆயிற்று?

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில், 2014 மார்ச் 31ஆம் தேதி முஷாரஃப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.

ஆனால், முஷாரஃப் மேற்கொண்ட தொடர் மேல்முறையீட்டு மனுக்கள் காரணமாக விசாரணையில் இழுபறி நீடித்தது. இதனிடையே, சிகிச்சையைக் காரணம் காட்டி பாகிஸ்தானை விட்டு முஷாரஃப் தப்பிச்சென்றது மேலும் சிக்கலுக்கு வழிவகுத்தது.

கடந்த மாதம் 28ஆம் தேதியே இந்த வழக்கின் தீர்ப்பானது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், இம்ரான் கான் தலைமையிலான அரசு வழக்கின் தீர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கக்கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை முறையிட்டது. அதனடிப்படையில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதில் இடைக்கால தடைவிதித்தது.

இதையடுத்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் டிசம்பர் 5ஆம் தேதி அரசுத் தரப்பில் புதிய வழக்கறிஞர்கள் குழு ஒன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியது. அப்போது, வழக்கை டிசம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றே வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.

முஷாரஃப் எங்கே?

முஷாரஃப் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் வசித்துவருகிறார். உடல்நலக்கோளாறு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு குறித்து பாகிஸ்தான் அரசு என்ன சொல்கிறது?

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு எதிராக வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து பாகிஸ்தான் அரசு விரிவாக பரீசிலிக்கும் என பிரதமரின் உதவியாளர் கூறினார்.

இதையும் படிங்க :அமெரிக்கா-சீனா முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் தயார் - ட்ரம்ப்

Last Updated : Dec 17, 2019, 10:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details