'பனாமா பேப்பர்ஸ்' ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து, மருத்துவச் சிகிச்சைக்காக அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
கவலைக்கிடமான நிலையில் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த அவர், பின்னர் உடல் நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்குத் திரும்பினார்.
இதனிடையே, மேல் சிகிச்சைக்காக நவாஸ் ஷெரிஃபை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், நவாஸ் ஷெரிஃப் வெளிநாடு செல்ல தடையிருப்பதால், அதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் அரசிடம் விண்ணப்பித்தனர். இதுகுறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்ட, பாகிஸ்தான் அரசு முன்னாள் பிரதமரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கியது.
இதோடு சேர்ந்து, 'அரசுக்குச் சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மீண்டும் பாகிஸ்தான் திரும்புவேன் என உத்தரவாதம் அளிக்கவேண்டும்' உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்தது.
ஆனால், நிபந்தனைகளோடு வெளிநாடு செல்ல நவாஸ் ஷெரிஃப் மறுத்துவிட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி அமைச்சர் ஃபரோக் நசீம், " சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல நவாஸ் ஷெரிஃபுக்கு நான்கு வாரங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டும்தான் அவர் வெளிநாடு சென்றுவர முடியும். இதற்காக அவர் ரூ. 7 ஆயிரத்து 500 கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். நிபந்தனைகள் இல்லாமல் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க மாட்டோம்" என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதையும் வாசிங்க : பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் காஷ்மீர் பிரச்னை தொடரும்!