இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக அவர் சார்பாக பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வாதாட இந்திய வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ஹபீஸ் கூறுகையில், "பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் சார்பாக வாதாட இந்திய வழக்கறிஞரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை.
ஜாதவ் சார்பாக இந்திய வழக்கறிஞரை நியமிக்க அந்நாடு நியாயமற்ற கோரிக்கைகளை விடுத்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் வழக்கறிஞராக வாதாட உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம். எங்களின் வாதம் சட்டத்திற்கு உட்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வாதாட அனுமதி அளிக்க முடியாது என இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது" என்றார்.
இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் (வயது 49), கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாகிஸ்தானை உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்நிய நாட்டிற்காக பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.ஆனால் அதனை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.