பியோங்யாங்: வடகொரிய தலைவரும் அந்நாட்டின் அதிபருமான கிம் ஜாங் உன், உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியாக 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வடகொரியாவில் உணவுப் பொருள்கள் பற்றாக்குறையால், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உணவுப் பொருள்களின் விலை கடுமையான உயர்ந்து வருகிறது.
இதற்கான காரணங்கள் குறித்து கிம் உன் தெரிவிக்கையில், “நாட்டில் விவசாய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கலாம். விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள், கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர். இந்த மழையின்போது பெருமளவு பொருள்கள் வீணாகின.
முன்னதாக இது தொடர்பாக ஏற்கனவே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுக்கு எச்சரித்துள்ளனர். மேலும், 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சுங்கச்சாவடிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும் அலுவலர்கள் கூறியுள்ளனர்.